Saturday, October 29, 2011

நண்பனைத் தேடி - 8. தடங்கல்

சுமார் 12 மணி வரை விக்கியையும், சுரேஷையும் விசாரித்த இன்ஸ்பெக்டர், நூறு வருடங்களாக தண்ணீர் வராத அருவியில் தண்ணீர் வருவதைப் பார்த்து, அவர்கள் சொல்வதை நம்பாமலும் இருக்க முடியவில்லை. நம்பவும் முடியவில்லை.

பின்னர், விக்கி மற்றும் சுரேஷ் மேல் எந்தத் தவறும் இல்லை. நடந்தது விபத்து என கேஸ் ஃபைல் செய்தார். அவர்கள் இருவரையும் ஹோட்டலுக்கு அனுப்பிவிட்டு, கிச்சாவைத் தேடும் பணியைத் தொடரச் சொன்னார்.

காலை 6 மணி வரைத் தேடி, மீட்புப் படையினர் சோர்ந்ததுதான் மிச்சம். கிச்சாக் கிடைக்கவில்லை.

நண்பனை பறிகொடுத்த துக்கத்தில் விடிய விடிய தூங்காமல் இருந்த விக்கியிடம் வந்த அகிலா, "டேய்! பாவி!  என் கிச்சாவைக் கூட்டிட்டுப் போய் கொன்னுட்டியே! ஏன்டா இப்படிப் பண்ணுன? அவன் உனக்கு என்ன துரோகம் பண்ணினான்? இப்படி அநியாயமா கொன்னுட்டியே!" என்று அழுது ஒப்பாரி வைத்தாள்.

விக்கியின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த சுரேஷ், சத்தம் கேட்டு விழித்துப் பார்த்தான். அகிலாவைச் சமாதானப்படுத்தலாம் என எழுந்தான் சுரேஷ். அதற்குள் விக்கி, "நிறுத்து! இன்னும் ஒரு தடவ கிச்சாவ கொன்னுட்டேன். கிச்சா செத்துப் போயிட்டான்னு யாராவது சொல்லுங்க; அப்புறம் நடக்கிறதே வேற!" என்று கத்தினான். பின்னர், "என் கிச்சா சாகல. அவன் காணாமப் போயிட்டான். என் கிச்சாக் கிடைப்பான். இல்லடா சுரேஷ்?" என்றான் விக்கி. என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்த சுரேஷ், பின் வேகமாக ஆமாம் என்பது போல் தலையசைத்தான்.

ஏதோ துக்கம் தாங்காமல் உளறுகிறான் என்று நினைத்தான் சுரேஷ். ஆனால் எங்கோ வெளியே போய்விட்டு வந்த விக்கி, தன் பேகில் (Bag) எல்லாம் எடுத்து வைத்துவிட்டு, "நான் தேடப்போறேன். வர்றியா?" என்றான். புரியாமல் விழித்த சுரேஷ், "எப்படி? எங்க போய்த் தேடப்போற?" என்றான்.

அதற்கு விக்கி, "நான் ஒருத்தர்கிட்ட மோட்டார் போட் (Motor Boat) வாங்கியிருக்கிறேன். அதுல அந்த ஆறு வழியாப் போய் பார்க்கலாம்" என்றான்.

சிறிது நேரம் யோசித்துப் பார்த்த சுரேஷ், போய் பார்த்துவிட்டு வந்தால், விக்கிக்கு ஆறுதலாக இருக்கும் என்று நினைத்து, அவனும் விக்கியுடன் கிளம்பினான்.

இருவரும் ஹோட்டலை விட்டு வெளியே இறங்க பேராசிரியர் அன்பு வந்து தடுத்தார். "யாரும் வெளியே போகக் கூடாது. மதியத்திற்கு மேல் எல்லோரும் காலேஜ் கிளம்பனும். டூர் கேன்சல் ஆயிடுச்சு. உள்ளே போங்க" என்றார்.

No comments:

Post a Comment