Wednesday, September 7, 2011

நண்பனைத் தேடி - 3. வறண்ட அருவி

"நான் இதுவரை அந்த அருவியில் தண்ணீர் வந்து பார்த்ததில்லை. ஆனால் சுமார் 100 வருஷத்திற்கு முன்னாடி, அதுல தான் அதிகமா தண்ணி வருமாம். அதுமட்டுமில்லாம கோடை காலத்தில கூட அதுல தண்ணி வரும் என்று என் தாத்தா சொல்லியிருக்கிறார்" என்றார், 40 வயது மதிக்கத்தக்க அந்த பழ வியாபாரி.

அவர் சொன்னதைக் கேட்டதும், விக்கிக்கு அதைப் பற்றி இன்னும் தெரிஞ்சுக்க ஆர்வமா இருந்தது. ஆனா அந்த அருவி இருக்கிற இடத்துக்கு போற வழி பராமரிக்காம விட்டதால சிதைஞ்சு போச்சு.

விக்கி அங்க போய் பார்க்கலாம் என்றான். சுரேஷ் மற்றும் கிச்சா அதற்கு மறுத்தனர். "நீங்க வராட்டி போங்க. நான் போய் பார்த்துவிட்டு வரேன்" என்றான் விக்கி. அவனை தனியாக விட முடியாமல் மற்ற இருவரும் உடன் சென்றனர்.

ஒரு வழியாக அந்த அருவியிலிருந்து தண்ணீர் கீழே விழும் இடத்தை அடைந்தனர். தண்ணீர் விழும் இடம் மற்ற அருவிகளில் இருப்பதை விட ஆழமாக இருந்தது. அதிலிருந்து தண்ணீர் நிரம்பி வெளி வருவது இரண்டாக பிரிந்திருந்தது. அதில் ஒரு பிரிவு சிறிது தூரம் ஓடி செண்பகாதேவி அருவியில் போய் சேர்ந்தது.

மறுபுறம் உள்ள பிரிவு நீண்ட தூரம் ஒரு சிறிய ஆறு போல் சென்றது. எதிலுமே தண்ணீர் இல்லாமல் ஆற்றுப்பாதை வறண்டு போய் இருந்தது. அருவியின் உயரம் சுமார் 50 அடி இருந்தது. அதன் உச்சியில் சிறிய குகை போன்று ஒரு பாறை தெரிந்தது. அதில் கதவு இருந்தது. அது மூடப்பட்டிருந்தது.

அந்த இடத்திற்கு செல்ல ஒரு ஒற்றையடி பாதை அருவியின் அருகில் இருந்தது. மிகவும் செங்குத்தான அப்பாதையில் சில இடங்களில் மட்டும் கற்களால் ஆன படிகள் இருந்தன.

(தேடுதல் தொடரும்…)

Tuesday, September 6, 2011

நண்பனைத் தேடி - 2. செண்பகாதேவி அருவி


முதலில் குற்றாலம் சென்றனர். அங்கே ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து அனைவரும் தங்கினர். பேராசிரியர் அன்பு, அனைவரையும் அழைத்து சில கண்டிஷன்ஸ் கூறினார், “அருவியில் குளிக்கவோ, ஷாப்பிங் பண்ணவோ, பாடம் சம்மந்தமாக தாவரங்கள் சேகரிக்கவோ யாரும் தனியாக செல்லக் கூடாது. முக்கியமாக மாணவிகள் பேராசிரியை துணை இல்லாமல் செல்லக் கூடாது. மாணவர்களும், குறைந்தது நான்கு பேராவது சேர்ந்துதான் செல்ல வேண்டும். எங்கு சென்றாலும் மாலை 6-7 மணிக்குள் ஹோட்டலுக்கு திரும்பி விட வேண்டும்.”

கொஞ்ச நேரம் விக்கியுடன் ஜாலியாக சுற்றலாம் என்று நினைத்த வளர்மதி, அதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிந்ததும், மனசுக்குள் பேராசிரியர் அன்புவை திட்டி தீர்த்தாள். வளரும் அகிலாவும் மற்றும் மூன்று மாணவிகளும், பேராசிரியை செல்வியுடன் சேர்ந்து செல்வதாக முடிவு செய்தனர். மற்ற ஐந்து மாணவிகள் பேராசிரியை தேவிகாவுடன் சேர்ந்து செல்வதாக முடிவு செய்தனர்.

விக்கி, கிச்சா மற்றும் சுரேஷ் கொஞ்ச நேரம் பேராசிரியை செல்வியுடன் செல்வதாக கூறி அவர்களுடன் சென்றனர். பின்னர் வளரும் அகிலாவும் பேசுவதாக தெரியவில்லை. எனவே மூவரும் அங்கிருந்து பிரிந்து தனியாக சுற்றச் சென்றனர்.

அங்கு இருக்கிறதிலியே உயரமா இருக்கிற அருவியில போய் குளிக்கலாம் என விக்கி ஐடியா கொடுக்க, மூவருமாக செண்பகாதேவி அருவிக்கு முதலில் சென்றனர். அங்கிருந்து பார்க்க இன்னும் உயரத்தில் ஒரு அருவி இருந்ததற்கான தடயம் இருக்க, அதிலிருந்து தண்ணீர் வரவில்லை. எனவே அதைப் பற்றி அங்கிருந்த ஒரு பழ வியாபாரியிடம் விசாரித்தனர்.

நண்பனைத் தேடி - 1. பயணம் ஆரம்பம்

ரோஸ்மேரி கலைக் கல்லூரியில்...

இளநிலை தாவரவியலில் முதலாமாண்டு பயிலும் மாணவர்களின் வகுப்பறை வழக்கத்திற்கு மாறாக பரபரப்பாக இருந்தது. அதற்கு காரணம், எல்லோரும் இன்னும் ஒரு வாரத்தில் செல்ல இருக்கும் கல்வி சுற்றுலா பற்றி பேசிக் கொண்டு இருந்தது தான். பேராசிரியர் அன்புச்செல்வன் உள்ளே வரவும் அனைவரும் அமைதியாயினர். அரை மணி நேர வகுப்பிற்கு பின், அவர் சுற்றுலாவிற்கு யாரெல்லாம் வருவதாகக் கேட்டார். உடனே மாணவர்களில் ஒருவன் தங்கள் பெயர்கள் எழுதப்பட்ட பேப்பரை அவரிடம் தந்தான். மொத்தம் 45 பேர் கொண்ட வகுப்பில் 30 பேர் மட்டுமே பெயர் கொடுத்திருந்தனர். அதைப் பார்த்துவிட்டு, 10 மாணவிகள் மட்டுமே பெயர் கொடுத்திருந்ததால், இருவரையும் ஒன்றாக அழைத்துச் சென்று விடலாம் என முடிவு செய்தார்.

அந்த புளிய மரத்தடியில் எப்போதும் போல் மாலை கல்லூரி முடிந்த பின் அவர்கள் ஐந்து பேரும் சங்கமமாயிருந்தனர். அந்த அவர்கள்: கிச்சா என்ற கிருஷ்ணகுமார், விக்கி என்ற விக்கிரமாதித்தன், சுரேஷ், கிச்சாவின் தோழி அகிலா, விக்கியின் தோழி வளர்மதி.
சுற்றுலா நாட்கள் 10 என்பதால் அகிலா வீட்டில் முதலில் அனுமதிக்கவில்லை. தான் எவ்வாறு விளக்கி அவர்களை சம்மதிக்க வைத்தாள் என அகிலா கூறி சந்தோஷப்பட்டாள். சுரேஷோ சுற்றுலா செல்வதற்காகவே தான் சேர்த்து வைத்த பணத்தில் தான் வருவதாகவும், வீட்டில் கேட்டதற்கு தரவில்லை என்றும் கூறினான். இவ்வாறாக ஒவ்வொரு மரத்தடியிலும் சுற்றுலா பற்றிய பேச்சே இருந்தது. ஒரு மணி நேர அரட்டைக்கு பின் விடை பெற்று அவரவர் வீட்டிற்கு கிளம்பினர்.

ஒரு வாரம் எப்படி சென்றது என்றே தெரியாமல் ஓடி விட்டது. அடுத்த நாள் (திங்கட்கிழமை) விடிந்தால், 5 மணிக்கு எல்லாம் பஸ் கிளம்பி விடும். வளர்மதிக்கு அதை நினைத்தே இரவெல்லாம் தூக்கம் வரவில்லை. பின்னர் எப்படியோ தூங்கிப் போனவள், காலை 4 மணிக்கெல்லாம் எழுந்துவிட்டாள். தேவையான டிரஸ், மற்ற பொருட்களையெல்லாம் முந்தின நாளே பேகில் எடுத்து வைத்து விட்டாள்.

எல்லோரும் கரெக்டா 5 மணிக்கு கல்லூரியில் ஆஜராகியிருந்தனர். 40 மாணவ மாணவிகள், இரண்டு பேராசிரியைகள் மற்றும் ஒரு பேராசிரியரைக் கொண்ட சுற்றுலாக் குழு பஸ்ஸில் மேற்கு தொடர்ச்சி மலைகளை நோக்கி பயணம் செய்தது.

(தேடுதல் தொடரும்…)