Wednesday, September 7, 2011

நண்பனைத் தேடி - 3. வறண்ட அருவி

"நான் இதுவரை அந்த அருவியில் தண்ணீர் வந்து பார்த்ததில்லை. ஆனால் சுமார் 100 வருஷத்திற்கு முன்னாடி, அதுல தான் அதிகமா தண்ணி வருமாம். அதுமட்டுமில்லாம கோடை காலத்தில கூட அதுல தண்ணி வரும் என்று என் தாத்தா சொல்லியிருக்கிறார்" என்றார், 40 வயது மதிக்கத்தக்க அந்த பழ வியாபாரி.

அவர் சொன்னதைக் கேட்டதும், விக்கிக்கு அதைப் பற்றி இன்னும் தெரிஞ்சுக்க ஆர்வமா இருந்தது. ஆனா அந்த அருவி இருக்கிற இடத்துக்கு போற வழி பராமரிக்காம விட்டதால சிதைஞ்சு போச்சு.

விக்கி அங்க போய் பார்க்கலாம் என்றான். சுரேஷ் மற்றும் கிச்சா அதற்கு மறுத்தனர். "நீங்க வராட்டி போங்க. நான் போய் பார்த்துவிட்டு வரேன்" என்றான் விக்கி. அவனை தனியாக விட முடியாமல் மற்ற இருவரும் உடன் சென்றனர்.

ஒரு வழியாக அந்த அருவியிலிருந்து தண்ணீர் கீழே விழும் இடத்தை அடைந்தனர். தண்ணீர் விழும் இடம் மற்ற அருவிகளில் இருப்பதை விட ஆழமாக இருந்தது. அதிலிருந்து தண்ணீர் நிரம்பி வெளி வருவது இரண்டாக பிரிந்திருந்தது. அதில் ஒரு பிரிவு சிறிது தூரம் ஓடி செண்பகாதேவி அருவியில் போய் சேர்ந்தது.

மறுபுறம் உள்ள பிரிவு நீண்ட தூரம் ஒரு சிறிய ஆறு போல் சென்றது. எதிலுமே தண்ணீர் இல்லாமல் ஆற்றுப்பாதை வறண்டு போய் இருந்தது. அருவியின் உயரம் சுமார் 50 அடி இருந்தது. அதன் உச்சியில் சிறிய குகை போன்று ஒரு பாறை தெரிந்தது. அதில் கதவு இருந்தது. அது மூடப்பட்டிருந்தது.

அந்த இடத்திற்கு செல்ல ஒரு ஒற்றையடி பாதை அருவியின் அருகில் இருந்தது. மிகவும் செங்குத்தான அப்பாதையில் சில இடங்களில் மட்டும் கற்களால் ஆன படிகள் இருந்தன.

(தேடுதல் தொடரும்…)

No comments:

Post a Comment