Saturday, October 29, 2011

நண்பனைத் தேடி - 8. தடங்கல்

சுமார் 12 மணி வரை விக்கியையும், சுரேஷையும் விசாரித்த இன்ஸ்பெக்டர், நூறு வருடங்களாக தண்ணீர் வராத அருவியில் தண்ணீர் வருவதைப் பார்த்து, அவர்கள் சொல்வதை நம்பாமலும் இருக்க முடியவில்லை. நம்பவும் முடியவில்லை.

பின்னர், விக்கி மற்றும் சுரேஷ் மேல் எந்தத் தவறும் இல்லை. நடந்தது விபத்து என கேஸ் ஃபைல் செய்தார். அவர்கள் இருவரையும் ஹோட்டலுக்கு அனுப்பிவிட்டு, கிச்சாவைத் தேடும் பணியைத் தொடரச் சொன்னார்.

காலை 6 மணி வரைத் தேடி, மீட்புப் படையினர் சோர்ந்ததுதான் மிச்சம். கிச்சாக் கிடைக்கவில்லை.

நண்பனை பறிகொடுத்த துக்கத்தில் விடிய விடிய தூங்காமல் இருந்த விக்கியிடம் வந்த அகிலா, "டேய்! பாவி!  என் கிச்சாவைக் கூட்டிட்டுப் போய் கொன்னுட்டியே! ஏன்டா இப்படிப் பண்ணுன? அவன் உனக்கு என்ன துரோகம் பண்ணினான்? இப்படி அநியாயமா கொன்னுட்டியே!" என்று அழுது ஒப்பாரி வைத்தாள்.

விக்கியின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த சுரேஷ், சத்தம் கேட்டு விழித்துப் பார்த்தான். அகிலாவைச் சமாதானப்படுத்தலாம் என எழுந்தான் சுரேஷ். அதற்குள் விக்கி, "நிறுத்து! இன்னும் ஒரு தடவ கிச்சாவ கொன்னுட்டேன். கிச்சா செத்துப் போயிட்டான்னு யாராவது சொல்லுங்க; அப்புறம் நடக்கிறதே வேற!" என்று கத்தினான். பின்னர், "என் கிச்சா சாகல. அவன் காணாமப் போயிட்டான். என் கிச்சாக் கிடைப்பான். இல்லடா சுரேஷ்?" என்றான் விக்கி. என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்த சுரேஷ், பின் வேகமாக ஆமாம் என்பது போல் தலையசைத்தான்.

ஏதோ துக்கம் தாங்காமல் உளறுகிறான் என்று நினைத்தான் சுரேஷ். ஆனால் எங்கோ வெளியே போய்விட்டு வந்த விக்கி, தன் பேகில் (Bag) எல்லாம் எடுத்து வைத்துவிட்டு, "நான் தேடப்போறேன். வர்றியா?" என்றான். புரியாமல் விழித்த சுரேஷ், "எப்படி? எங்க போய்த் தேடப்போற?" என்றான்.

அதற்கு விக்கி, "நான் ஒருத்தர்கிட்ட மோட்டார் போட் (Motor Boat) வாங்கியிருக்கிறேன். அதுல அந்த ஆறு வழியாப் போய் பார்க்கலாம்" என்றான்.

சிறிது நேரம் யோசித்துப் பார்த்த சுரேஷ், போய் பார்த்துவிட்டு வந்தால், விக்கிக்கு ஆறுதலாக இருக்கும் என்று நினைத்து, அவனும் விக்கியுடன் கிளம்பினான்.

இருவரும் ஹோட்டலை விட்டு வெளியே இறங்க பேராசிரியர் அன்பு வந்து தடுத்தார். "யாரும் வெளியே போகக் கூடாது. மதியத்திற்கு மேல் எல்லோரும் காலேஜ் கிளம்பனும். டூர் கேன்சல் ஆயிடுச்சு. உள்ளே போங்க" என்றார்.

Monday, October 24, 2011

நண்பனைத் தேடி - 7. தேடுதல் ஆரம்பம்

பள்ளத்திலிருந்து வெளியே வந்து அந்தப் பாதை அருகே அமர்ந்திருந்த விக்கிக்கு, அவ்வளவு உயரத்தில் இருந்து கீழே விழுந்ததால் உண்டாகியிருந்த அதிர்ச்சியிலிருந்து மீள சில நிமிடங்கள் ஆனது.

பின்னர் தான் எங்கிருக்கிறோம் என்பதை உணர்ந்த விக்கி, கிச்சாவைத் தண்ணீர் அடித்துச் சென்றது நினைவுக்கு வர, எழுந்து பள்ளத்தில் போய் குதிக்க ஓடினான்.

அவனைத் தடுத்த சுரேஷ், "நில்லுடா! எங்க போற? உனக்கு நீச்சல் தெரியாதுல்ல? எல்லாம் முடிஞ்சு போச்சு. ஒண்ணும் பண்ண முடியாது" என்றான்.

"இல்லடா! கிச்சா... கிச்சா, தண்ணில" என்று சொல்லிவிட்டு மீண்டும் குதிக்கப்போனான். "நில்லுடா! சொல்றது காதுல விழல? இதுல போய் அவனைக் காப்பாத்த முடியாது. நல்லா நீச்சல் தெரிஞ்சவங்களே, இதுல போய் தப்புறது கஷ்டம். நம்மால முடியாது" என்றான்.

விக்கிக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. அவனுக்கு மறுபடியும் உள்ளே குதிச்சுடனும் என்கிற எண்ணமே இருந்தது. சுரேஷோட பிடியில தான் நின்னுட்டு இருந்தான். சுரேஷ் மறுபடியும், "போடா! போய் குதி! பின்னாடியே நானும் வந்து குதிக்கேன்! மூனுபேரும் ஒண்ணா போய் சேருவோம்" என்று விட்டு விட்டான்.

குதிக்கச் சென்றவன் பயந்து நிற்க, சுரேஷ் அருகில் வந்து அவனைத் தொட்டான். "அய்யோ! கிச்சா..." என்று அலறினான் விக்கி. சுரேஷ் அவனை சமாதானப்படுத்தவா, இழந்து போன நண்பனுக்காக அழவா என்று தடுமாறினான்.

இருவரும் ஹோட்டலுக்கு வந்து சேரும் போது இரவு மணி 10. அவர்களுக்காக வாசலிலேயே காத்திருந்த பேராசிரியர் அன்பு, அவர்களுக்கு கால் பண்ணி பண்ணி சோர்ந்து போய் இருந்தார்.

அவர்கள் வருவதைப் பார்த்ததும், நல்லா திட்ட வேண்டுமென்று எழுந்து நின்றார். விக்கியோ பேயறைந்தவன் போலிருக்க, சுரேஷோ பறிகொடுத்தவன் போலிருக்க, கிச்சாவைக் காணாததால், அவர்களைத் திட்டுவதற்கு பதில், "கிச்சா எங்கே?" என்றார் பேராசிரியர் அன்பு.

எதுவும் பேசாமல் விக்கி நிற்க, அழுது அழுது கிச்சாவைப் பறி கொடுத்த விஷயத்தை விளக்கினான் சுரேஷ். வாயடைத்து நின்ற பேராசிரியர், முதல் வேளையாகச் சென்று போலீஸிற்கு போன் செய்தார்.

செய்தி கேட்ட மாணவ மாணவியர் அனைவரும் துக்கத்தில் மூழ்கினர். விரைந்து வந்த போலீசார், பேராசிரியர், விக்கி மற்றும் சுரேஷை அழைத்துக் கொண்டு, மீட்புப் படையுடன் அந்த அருவிக்குச் சென்றார்.

Sunday, October 23, 2011

நண்பனைத் தேடி - 6. இழப்பு

கதவைத் தள்ள முடியாததால் பதட்டத்தில் இருந்த விக்கியிடம், தன் கையில் இருந்த டார்ச்சைக் கொடுத்தான் கிச்சா. பின்னர் கதவிலிருந்து சில அடிகள் பின்னே சென்று, முட்டளவு தண்ணீரிலும் தன் பலம் முழூவதும் கொடுத்து ஓடி வந்து, கதவில் மோதினான். கதவு உடைந்து விழ, கிச்சாவும் கதவோடு சேர்ந்து போய் விழுந்தான்.

வேகமாக சென்று கொண்டிருந்த அருவியின் தண்ணீர், கதவோடு கிச்சாவையும் அடித்துச் சென்று கீழே தள்ளியது.

கதவு உடைந்த சத்தம் கேட்டு பார்த்த சுரேஷ், குகையின் மேலிருந்து நிரம்பி வழியும் தண்ணீரோடு கதவு விழ, கிச்சாவும் விழுவதைப் பார்த்தான்.

அருவி விழும் பள்ளத்திலிருந்து பிரிந்து செல்லும் தண்ணீரில், ஆறு போல் தண்ணீர் செல்லும் பாதை வழியாக கிச்சாவைத் தண்ணீர் அடித்துச் சென்றது.

ஒற்றையடிப் பாதையில் கொஞ்ச தூரமே ஏறி இருந்த சுரேஷ், கீழே இறங்கி வந்து அருவித் தண்ணீர் விழும் பள்ளத்தை நெருங்கி, உள்ளே குதித்தான்.

அடுத்த நொடி, கிச்சாவைத் தண்ணீர் அடித்துச் செல்ல, அவனைப் பிடிக்கலாம் என்று வெளியே வந்த விக்கியையும் தண்ணீர் அடித்துக் கீழே தள்ளியது. சுரேஷ் உள்ளே குதிக்கவும், அந்தப் பள்ளத்தில் வந்து விக்கி விழவும் சரியாக இருந்தது. நல்ல வேளையாக விக்கியையும் அடித்துச் செல்லாமல், சுரேஷ் பிடித்து இழுத்து பள்ளத்திற்கு வெளியே வந்து விட்டான்.

அந்த வேகமான தண்ணீரின் ஓட்டத்தில் விக்கியுடன் எதிர் நீச்சல் போட சுரேஷ் மிகவும் தடுமாறியே வந்து சேர்ந்தான். மறுபடியும் அந்த ஓட்டத்தில் சென்று கிச்சாவைக் காப்பாற்ற முடியும் என்கிற நம்பிக்கை சுரேஷிற்குத் துளி அளவும் இல்லை.

Friday, October 21, 2011

நண்பனைத் தேடி - 5. வெள்ளம்

உள்ளே சென்ற இருவருக்கும் ஒரே ஆச்சரியம். குகைக்குள் கொஞ்சமும் வெளிச்சம் வராததால் இருட்டாக இருந்தது. ஆனால் ஒரு மூலையிலிருந்து நீல நிற ஒளி தெரிந்தது. ரேடியம் மாதிரி ஒளிர்ந்தது அந்த சிறிய கல்.

தன் பேன்ட் பையில் இருந்து டார்ச் எடுத்த கிச்சா, அந்த கல் இருக்கும் இடத்தை நோக்கி டார்ச் அடித்தான். அந்த கல் இருந்த இடம் அவர்களுக்குக் குழப்பத்தைத் தந்தது.

ஏனென்றால் அவர்கள் இருக்கும் குகை போன்ற ஒரு சிறிய மாதிரி குகை; அதின் உச்சியில் உள்ள ஒரு சிறிய ஒட்டையை அடைத்தவாறு அந்தக் கல் இருந்தது. அந்த மாதிரி குகையின் அருகிலிருந்து பாறை போன்ற தடுப்பு நீண்டு வட்டமாக அமைந்திருந்தது. அந்த வட்டத்தின் நடுவில் ஏரியைப் போன்றே தண்ணீர் இருந்தது.

விக்கி அருகில் சென்று, அந்த நீல நிற டைமன்ட் போன்ற கல்லை, அதன் இடத்திலிருந்து உருவி எடுத்தான். அடுத்த விநாடி அந்த நீல நிற ஒளி, சிவப்பு நிற ஒளியாக மாறி அவன் கையை சுட்டெரித்தது. உடனே விக்கி, சூடு தாங்காமல் கல்லை கீழே போட்டான். கீழே விழுந்தக் கல் ஒளியை இழந்தது. இருட்டில் காணாமல் போன கல்லை டார்ச் அடித்துத் தேடினர்.

கீழே அவர்களுக்காகக் காத்திருந்த சுரேஷ், குகைக்குள் சென்றவர்கள் எப்போது வெளியே வருவார்கள் என பார்த்துக் கொண்டு நின்றான். அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, குகையின் பின்னால் இருந்து தண்ணீர் எழுந்து வந்தது. எழுந்து வந்த தண்ணீரின் வேகத்தில் திறந்து இருந்தக் குகைக் கதவு மூடியது. தண்ணீரோ அருவியாகக் கீழே கொட்டியது.

அருவித் தண்ணீரின் அளவு, மற்ற எல்லா அருவிகளில் வருவதை விட அதிக அளவு இருந்தது. இக்கட்டான சூழலை உணர்ந்த சுரேஷ், நண்பர்களுக்கு உதவி செய்ய, அந்த செங்குத்தான பாதையில் ஏற ஆரம்பித்தான்.

குகைக்குள் கல்லைத் தேடிக்கொண்டிருந்த விக்கியும் கிச்சாவும் திடீரென்று கதவு மூடப்படவும், பயந்து கதவை நோக்கி ஓடினர். தங்கள் பலம் முழூவதும் கொடுத்தும் அவர்களால் திறக்க முடியவில்லை. இதற்கிடையில் குகையின் உச்சியில் ஒரு கல் நகர்ந்து ஒரு ஓட்டை உருவானது. அதன் வழியாகத் தண்ணீர் குகையின் உள்ளே வர ஆரம்பித்தது.

ஒரு ஆள் சென்று விடக் கூடிய அளவு உள்ள அந்த ஓட்டை வழியே வரும், வேகமான தண்ணீர், அரை நிமிடத்தில் குகையில் தண்ணீரின் அளவை அவர்கள் முட்டிக்கு உயர்த்தியது.

Wednesday, October 19, 2011

நண்பனைத் தேடி - 4. மர்மக் குகை

விக்கி அந்தப் பாறையிலும் ஏறிச் சென்று பார்க்க வேண்டும் என்றான். "ஏற்கனவே மணி 2 ஆகி விட்டது. நாம் உடனே திரும்பினாலும் ஹோட்டலுக்கு போக 6 மணிக்கு மேல் ஆகும். வா போகலாம்" என்றான் சுரேஷ். கிச்சா கூட அதைத் தான் கூறினான்.

ஆனால் விக்கி கேட்கவில்லையே. "நான் போகத்தான் செய்வேன்" என்று ஏற ஆரம்பித்தான் அந்த ஒற்றையடிச் செங்குத்துப் பாதையில். பின்னாடியே கிச்சாவும், சுரேசும் ஏறினர். கொஞ்ச தூரத்திலேயே சுரேஷிற்கு பயமாக இருக்க, "நீங்க போய்ட்டு வாங்க. நான் இங்கேயே இருக்கிறேன்" என்று கூறிவிட்டு, கீழே இறங்கி அந்த பாதையின் ஆரம்பத்தில் இருந்த ஒரு கல்லில் உட்கார்ந்தான்.

கிச்சாவிற்கு பயமாக இருந்தாலும், விக்கி முன்னாடி செல்வதால் ஒரு தைரியம் இருந்தது.

அந்த பாதையில் இருந்த படிகளில் ஏறுவது அவ்வளவு எளிதாக இல்லை. ஒரு படியில் இருந்து அடுத்தப் படியில் ஏற முன்னாடி உள்ளப் படிகளில் கை வைத்துப் பிடித்துதான் செல்ல வேண்டும். நிமிர்ந்து தான் நடப்பேன் என்றால், தலைகீழாக விழ வேண்டியதுதான்.

ஒரு வழியாக இருவரும் அருவியின் உச்சியை அடைந்தனர். மேலே சென்ற பின் இருவருக்கும் அவ்வளவு ஒரு சந்தோஷம். சந்தோஷத்தில் இருவரும் கத்தினர்; குதித்தனர்; சுரேஷை கூப்பிட்டு சந்தோஷ கூச்சலிட்டனர்.

திரும்பி மேலே பார்த்த சுரேஷ், "அப்பாடா! ஒரு வழியாக நல்லபடியாக ஏறிவிட்டனர்" என்று நினைத்தான். ஆனாலும் அவன் மனதில் ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. அவர்கள் மறுபடியும் கீழே இறங்கி வரும் வரை அவனுக்குத் தலைவலிதான்.

மேலே அவர்கள் இருவரும் அந்த குகை அருகில் சென்றனர். குகையிலிருந்த கதவில் ஒரு பூட்டு போட்டு பூட்டியிருந்தனர்.

அந்த பூட்டின் அளவும், வடிவமும் வித்தியாசமாக இருந்தது. "ரொம்ப வருடங்களுக்கு முன்னாடி உள்ளதாக இருக்கலாம்" என்றான் விக்கி.

பின்னர் இருவருமாக அந்தக் குகை மீது ஏறினர். ஏறி அந்தப் பக்கம் பார்த்தால், ஒரு பெரிய ஏரி இருந்தது. அந்தக் குகையில் இருந்து நீளும் பாறை ஒரு வட்ட வடிவில் சென்றது. அது ஏரிக்குத் தடுப்பாக இருந்தது.

குகையிலிருந்து கீழே இறங்கிய இருவரும் ஒரு கல்லை எடுத்து பூட்டை உடைக்க முயற்சித்தனர். அப்போது சுரேஷ் அழைக்கும் சத்தம் கேட்டு "என்ன?" என்றான் கிச்சா. "டேய்! கீழே வாங்கடா. மணி இப்பவே 4 ஆயிடுச்சு" என்றான் சுரேஷ்.

அதற்குள் விக்கி பூட்டை உடைத்து கதவைத் திறந்தான். எனவே "டேய்! ஒரு 5 நிமிஷம் வெய்ட் பண்ணு. வந்திடுவோம்" என்றான் விக்கி.