Monday, October 24, 2011

நண்பனைத் தேடி - 7. தேடுதல் ஆரம்பம்

பள்ளத்திலிருந்து வெளியே வந்து அந்தப் பாதை அருகே அமர்ந்திருந்த விக்கிக்கு, அவ்வளவு உயரத்தில் இருந்து கீழே விழுந்ததால் உண்டாகியிருந்த அதிர்ச்சியிலிருந்து மீள சில நிமிடங்கள் ஆனது.

பின்னர் தான் எங்கிருக்கிறோம் என்பதை உணர்ந்த விக்கி, கிச்சாவைத் தண்ணீர் அடித்துச் சென்றது நினைவுக்கு வர, எழுந்து பள்ளத்தில் போய் குதிக்க ஓடினான்.

அவனைத் தடுத்த சுரேஷ், "நில்லுடா! எங்க போற? உனக்கு நீச்சல் தெரியாதுல்ல? எல்லாம் முடிஞ்சு போச்சு. ஒண்ணும் பண்ண முடியாது" என்றான்.

"இல்லடா! கிச்சா... கிச்சா, தண்ணில" என்று சொல்லிவிட்டு மீண்டும் குதிக்கப்போனான். "நில்லுடா! சொல்றது காதுல விழல? இதுல போய் அவனைக் காப்பாத்த முடியாது. நல்லா நீச்சல் தெரிஞ்சவங்களே, இதுல போய் தப்புறது கஷ்டம். நம்மால முடியாது" என்றான்.

விக்கிக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. அவனுக்கு மறுபடியும் உள்ளே குதிச்சுடனும் என்கிற எண்ணமே இருந்தது. சுரேஷோட பிடியில தான் நின்னுட்டு இருந்தான். சுரேஷ் மறுபடியும், "போடா! போய் குதி! பின்னாடியே நானும் வந்து குதிக்கேன்! மூனுபேரும் ஒண்ணா போய் சேருவோம்" என்று விட்டு விட்டான்.

குதிக்கச் சென்றவன் பயந்து நிற்க, சுரேஷ் அருகில் வந்து அவனைத் தொட்டான். "அய்யோ! கிச்சா..." என்று அலறினான் விக்கி. சுரேஷ் அவனை சமாதானப்படுத்தவா, இழந்து போன நண்பனுக்காக அழவா என்று தடுமாறினான்.

இருவரும் ஹோட்டலுக்கு வந்து சேரும் போது இரவு மணி 10. அவர்களுக்காக வாசலிலேயே காத்திருந்த பேராசிரியர் அன்பு, அவர்களுக்கு கால் பண்ணி பண்ணி சோர்ந்து போய் இருந்தார்.

அவர்கள் வருவதைப் பார்த்ததும், நல்லா திட்ட வேண்டுமென்று எழுந்து நின்றார். விக்கியோ பேயறைந்தவன் போலிருக்க, சுரேஷோ பறிகொடுத்தவன் போலிருக்க, கிச்சாவைக் காணாததால், அவர்களைத் திட்டுவதற்கு பதில், "கிச்சா எங்கே?" என்றார் பேராசிரியர் அன்பு.

எதுவும் பேசாமல் விக்கி நிற்க, அழுது அழுது கிச்சாவைப் பறி கொடுத்த விஷயத்தை விளக்கினான் சுரேஷ். வாயடைத்து நின்ற பேராசிரியர், முதல் வேளையாகச் சென்று போலீஸிற்கு போன் செய்தார்.

செய்தி கேட்ட மாணவ மாணவியர் அனைவரும் துக்கத்தில் மூழ்கினர். விரைந்து வந்த போலீசார், பேராசிரியர், விக்கி மற்றும் சுரேஷை அழைத்துக் கொண்டு, மீட்புப் படையுடன் அந்த அருவிக்குச் சென்றார்.

No comments:

Post a Comment