Friday, October 21, 2011

நண்பனைத் தேடி - 5. வெள்ளம்

உள்ளே சென்ற இருவருக்கும் ஒரே ஆச்சரியம். குகைக்குள் கொஞ்சமும் வெளிச்சம் வராததால் இருட்டாக இருந்தது. ஆனால் ஒரு மூலையிலிருந்து நீல நிற ஒளி தெரிந்தது. ரேடியம் மாதிரி ஒளிர்ந்தது அந்த சிறிய கல்.

தன் பேன்ட் பையில் இருந்து டார்ச் எடுத்த கிச்சா, அந்த கல் இருக்கும் இடத்தை நோக்கி டார்ச் அடித்தான். அந்த கல் இருந்த இடம் அவர்களுக்குக் குழப்பத்தைத் தந்தது.

ஏனென்றால் அவர்கள் இருக்கும் குகை போன்ற ஒரு சிறிய மாதிரி குகை; அதின் உச்சியில் உள்ள ஒரு சிறிய ஒட்டையை அடைத்தவாறு அந்தக் கல் இருந்தது. அந்த மாதிரி குகையின் அருகிலிருந்து பாறை போன்ற தடுப்பு நீண்டு வட்டமாக அமைந்திருந்தது. அந்த வட்டத்தின் நடுவில் ஏரியைப் போன்றே தண்ணீர் இருந்தது.

விக்கி அருகில் சென்று, அந்த நீல நிற டைமன்ட் போன்ற கல்லை, அதன் இடத்திலிருந்து உருவி எடுத்தான். அடுத்த விநாடி அந்த நீல நிற ஒளி, சிவப்பு நிற ஒளியாக மாறி அவன் கையை சுட்டெரித்தது. உடனே விக்கி, சூடு தாங்காமல் கல்லை கீழே போட்டான். கீழே விழுந்தக் கல் ஒளியை இழந்தது. இருட்டில் காணாமல் போன கல்லை டார்ச் அடித்துத் தேடினர்.

கீழே அவர்களுக்காகக் காத்திருந்த சுரேஷ், குகைக்குள் சென்றவர்கள் எப்போது வெளியே வருவார்கள் என பார்த்துக் கொண்டு நின்றான். அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, குகையின் பின்னால் இருந்து தண்ணீர் எழுந்து வந்தது. எழுந்து வந்த தண்ணீரின் வேகத்தில் திறந்து இருந்தக் குகைக் கதவு மூடியது. தண்ணீரோ அருவியாகக் கீழே கொட்டியது.

அருவித் தண்ணீரின் அளவு, மற்ற எல்லா அருவிகளில் வருவதை விட அதிக அளவு இருந்தது. இக்கட்டான சூழலை உணர்ந்த சுரேஷ், நண்பர்களுக்கு உதவி செய்ய, அந்த செங்குத்தான பாதையில் ஏற ஆரம்பித்தான்.

குகைக்குள் கல்லைத் தேடிக்கொண்டிருந்த விக்கியும் கிச்சாவும் திடீரென்று கதவு மூடப்படவும், பயந்து கதவை நோக்கி ஓடினர். தங்கள் பலம் முழூவதும் கொடுத்தும் அவர்களால் திறக்க முடியவில்லை. இதற்கிடையில் குகையின் உச்சியில் ஒரு கல் நகர்ந்து ஒரு ஓட்டை உருவானது. அதன் வழியாகத் தண்ணீர் குகையின் உள்ளே வர ஆரம்பித்தது.

ஒரு ஆள் சென்று விடக் கூடிய அளவு உள்ள அந்த ஓட்டை வழியே வரும், வேகமான தண்ணீர், அரை நிமிடத்தில் குகையில் தண்ணீரின் அளவை அவர்கள் முட்டிக்கு உயர்த்தியது.

No comments:

Post a Comment